ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 1, 2014

விநாயகருக்கு முன் எலியையும், அரசையும்,வேம்பையும் ஏன் வைத்துள்ளார்கள்?

விநாயகருக்கு முன் எலியை வைக்கின்றார்கள். தான் குடியிருக்க எலி வங்கு போட்டு அதில் வாழுகின்றது.

நீங்கள் நல்ல மனதோடு இருக்கின்றீர்கள். வேதனைப்படும் மனிதனை நுகருகின்றீர்கள். நுகர்ந்த அணுக்கள் உங்கள் உடலிலுள்ள நல்ல அணுக்களில் விஷமாகச் சேருகின்றது.

நல்ல அணுக்களில் விஷம் கலந்துவிட்டால் குணங்கள் மாறிவிடும்.
இதுதான் ஓமுக்குள் ஓம் என்பது.
பிராணவத்தை மாற்றுகின்றது.
உணர்ச்சிகளை மாற்றுகின்றது.
எண்ணங்களை மாற்றுகின்றது.
செயல்களை மாற்றிவிடுகின்றது
என்பதனைக் காட்டுவதற்குத்தான் எலியைப் போடுகின்றார்கள்.

இவ்வாறு, விநாயகருக்கு முன் எலியைப் போட்டு குளக்கரையில் வட மேற்காக விநாயகரை வைத்தார்கள். நாம் வட கிழக்காக வணங்கும்படி செய்தார்கள்.

காலையில் எழுந்தவுடன் உடல் அழுக்கைப் போக்குகின்றோம். துணி அழுக்கைப் போக்குகின்றோம். கரையேறி வந்த பின் விநாயகரைப் பார்த்தவுடன் யானைத் தலை போட்டிருக்கின்றது.

மிருகங்களின் உடலில் இருக்கும்போது வலுகொண்ட எண்ணத்தை உருவாக்கி எண்ண வலு பெற்ற மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்று அறிகின்றோம்.

மற்ற உடல்களில் இருக்கும்போது புல்லைத் தின்றோம், தழைத் தாம்புகளைத் தின்றோம். கனிகளைத் தின்றோம்.

மனிதனான பின் வேகவைத்துச் சமைத்துச் சாப்பிடுகின்றோம் என்று அருகம்புல், தழைத் தாம்பு, கனி, கொழுக்கட்டை இவைகளைப் பார்த்து நாம் தெரிந்து கொள்கின்றோம்.

எதையும் வேக வைத்தால் மறுபடி முளைக்காது. பச்சைப் பருப்பை விழுங்கிவிட்டால் மலத்தில் அது வெளிப்பட்டு செடியாக முளைத்துவிடும். மலத்தின் விஷத்தை உரமாக எடுத்து வெகுவேகமாக முளைக்கும்.

பறவை இனங்கள் பழத்தைச் சாப்பிடும். பழத்தின் சத்து அதற்குச் சாப்பாடு ஆகிவிடும். பழத்தின் வித்து மலத்தில் வெளிப்பட்டு வேகமாக முளைத்துவிடும்.

இதே மாதிரி காக்கைகளோ, குருவிகளோ அரச மரத்தின் பழத்தைச் சாப்பிடும். அரசம் பழத்தின் வித்துக்களை வீட்டுகளின் மேல் போட்டுவிடும்.

அந்த வித்து காற்றிலிருந்து நீர் சத்தை எடுத்து வளர்ந்துவிடும். நீர் இருக்கும் பக்கம் தன் விழுதுகளைப் பாய்ச்சி தண்ணீர் இருக்குமிடத்தில் ஆழமாகப் போகும். இது அரசு.

துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில்
நாலா பக்கமும் தன் உணர்வலைகளைப் பாய்ச்சி
விஷத்தை மாற்றி ஒளியின் சரீரமாகப் பெற்றது.
அதனால்தான் விநாயகர் பக்கம் அரசமரத்தை வைத்துள்ளார்கள்..

அதே சமயத்தில், அருகில் வேப்பமரத்தை வைத்துள்ளார்கள். வேதனைப்படுபவர்கள், கஷ்டப்படுபவர்கள், இவர்களை நாம் சந்திக்கும்போது நமது வாழ்க்கையும் கசக்க ஆரம்பித்து விடுகின்றது.

அதே வேதனையோடு நாம் ஒருவரிடம் சொல்லப்படும்போது அவர்கள் வாழ்க்கையும் கசக்க ஆரம்பித்துவிடுகின்றது. இந்த உண்மையை உணர்த்துவதற்குத் தான் வேம்பை அங்கே வைத்தார்கள்.

நாம் குளித்துவிட்டுக் கரையேறி வருகின்றோம். நம் உயிIர் எத்தனையோ சரீரங்கள் கடந்து நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கின்றது.

ஒவ்வொரு சரீரத்திலும் இலைகளையும், கனிகளையும் சாப்பிட்டு வந்திருக்கின்றோம் என்று நாம் நம்மை அறிவதற்கு இவைகளை விநாயகருக்கு முன் வைக்கின்றார்கள்.

இதை யாராவது புரிந்து கொள்கின்றோமோ? இல்லை.

ஏழைகளுக்கு எதுவுமில்லை. அதனால் அருகம்புல்லைக் கொடுத்தல் ஆசிர்வாதம் கொடுக்கின்றார் என்று தவறான நிலைகளைத்தான் காட்டுகின்றார்கள்.

நாம் இலைகளையும் காய் கனிகளையும் சாப்பிட்டுத்தான் இன்று மனிதனாகப் பிறந்திருக்கிறோம். ஆனால், இன்று கொழுக்கட்டையை வேக வைக்கும்போது அதிலுள்ள பருப்பு முளைக்காது.

அனைத்தையும் வேக வைத்தவன் துருவ நட்சத்திரம். நாம் புல்லைத் தின்றோம். தழைத்தாம்புகளைத் தின்றோம். சுவை மிக்க நிலைகளில், கொழுக்கட்டையைப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம்.
இந்தப் பிள்ளை யார்? நீ சிந்தித்து பார்.
உயிரால் வளர்க்கப்பட்டது, இந்த மனித உடல்
நீ சிந்தித்துப் பார், என்று சொல்கின்றார்கள்.

வேதனை என்ற உணர்வை நுகரும்பொழுது, உடல் நலிவடைகின்றது. அப்பொழுது நம் உடலை உருவாக்கிய உயிரான ஈசனுக்குத் துரோகம் செய்கின்றோம், மனிதனாக உருவாக்கிய, ஈசனை மதிக்கவில்லை என்று அர்த்தம்.

ஈஸ்வரன் கோவிலில் அபிஷேகம் செய்வதால், ஒன்றும் பிரயோஜனம் இல்லை.
உயிரான ஈசனிடம், வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால்,
கையில் அழுக்குப் பட்டால்,
நல்ல தண்ணீரை விட்டுச் சுத்தப்படுத்துகின்ற மாதிரி,
ஈஸ்வரா, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்,  என்று இதை விட்டுச் சுத்தப்படுத்த வேண்டும்.

நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் நம் உடலில் எல்லா அணுக்களிலும் படும். அதனால், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், ஜீவாத்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.

இதுதான் நம் ஞானிகள் காட்டிய அருள் வழி.