ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 29, 2012

குரு உணர்த்திய அருள் வழிகள்

 
சாமி புத்தகம்    குரு உணர்த்திய அருள் வழிகள்
(பக்கம் 2-8)
நமது  பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தின் இயக்கமே, ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து, ஓர் சகோதரத் தத்துவத்தின் அடிப்படையில்தான், ஒரு குழுவாக, ஐக்கியமாக இயங்குகின்றது. இதைப் போன்றே, நம் சரீரத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும், ஒவ்வொரு உணர்வும், ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

நம்மிடத்தில் செயல்படும் உணர்வுகள், நன்மை, தீமை போன்றவைகளைப் பகுத்தறியும் தன்மையாக இயங்குகின்றன. மேலும்,
நம்மிடத்தில் இயங்கும் உணர்வுகள்,
அதனதன் இனச்சத்தைக் கவர்ந்து
தன்னைத் தானே வளர்த்துக் கொள்கின்றன.
இவ்வாறு, தன்னிச்சையாக இயங்குகின்ற உணர்வுகளைச் சமப்படுத்தி, ஒளியாக மாற்றுகின்ற ஞானத்தைத் தந்தருளிய, மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர், அவர்களுடைய அருள்சக்தி இப்புவியில் பரவியிருக்கின்றது.

குருதேவர், தமது உணர்வை ஒளியாக மாற்றி, சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து, ஒளிச்சுடராகச் சுழன்று கொண்டிருந்தாலும், அவர்தம் மனித வாழ்க்கைக் காலத்தில், உபதேசித்த உணர்வுகள் அனைத்தும், இக்காற்று மண்டலத்தில் படர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு மனிதரும்,
தன் உணர்வுகள் அனைத்தையும் உயிரோடு ஒன்றி,  
ஒளியின் தன்மையாகப் பெறச் செய்கின்ற,
தகுதியைப் பெறுவதுதான், வைகுண்ட ஏகாதசி
என்று அறிய வேண்டும்.

ஆனால் நாமோ, வைகுண்ட ஏகாதசியன்று உடலைவிட்டுப் பிரிந்து சென்றால், பிரிந்து சென்றவர் புனிதம் பெறுவார், என்று கருதுகின்றோம். ஆனால், எவரொருவர் அருள்ஞானிகளின் அருள் உணர்வலைகளைத் தன்னுள் ஈர்த்து வளர்த்துக் கொள்கின்றாரோ, அந்நாள்
அவர் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் ஆற்றலை,
வலுப் பெறச்செய்கின்ற நாளாகின்றது
என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி”,   தெய்வத்திற்கு உரிய நாள் என்று வைத்து, மகரிஷிகள் மனித வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி, விண்ணுலகம் செல்லுகின்ற நன்னாளாகவும், மனிதனின் உணர்வின் நிலைகளில், பத்தாவது நிலையினைப் பெறுகின்ற நன்னாளாகவும், அக்காலத்தில் மகரிஷிகளால் ஏற்படுத்தப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியன்றுதான், நம் சற்குருதேவர் மனிதச் சரீரம் நீத்து, விண்ணுலகம் சென்றார். மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் காண்பித்தருளிய, அருள்நெறிகளை நாமும் கடைப்பிடித்து, உணர்வினை ஒளியாக்கும் ஆற்றலினைப் பெறும் தகுதியினை, நம்மிடத்தில் வளர்த்துக் கொள்வோம்.

இந்நூற்றாண்டில், அபரிதமான விஞ்ஞான வளர்ச்சியால், காற்று மண்டலம் நஞ்சு கலந்ததாக மாறி, ஜீவராசிகள் அந்நஞ்சினைச் சுவாசிக்கும் நிலைக்குக் கொண்டு போகப்பட்டிருக்கின்றன. மேலும், விஞ்ஞான அறிவு கொண்டு, போகப் பொருள்களை அளவு கடந்து உருவாக்கி, அதனில் மனிதரின் சிந்தனையை மயங்கச் செய்து, எங்கும் இருள் சூழ்ந்த (மனம் குழம்பிய) நிலையை உருவாக்கிவிட்டனர் விஞ்ஞானிகள்.

ஆகவே, ஆறறிவு படைத்த நாம், ஒரு பன்றி சாக்கடையில் இருக்கும் துர்நாற்றங்களை விலக்கித் தன் உணவான பருப்பு, மற்றும் கிழங்கு வகைகளைத் தேடிப் பெறுகின்றதோ, அது போன்று, நம் வாழ்வைச் சூழ்ந்த தீமைகளை அகற்றி, நல் உணர்வுகளை நம்மிடத்திலே வளர்ப்போம்.

இயற்கையில் விளைந்த காய்கறிகள், நஞ்சு கலந்ததாக இருந்தாலும், மனிதன் தன் ஆறாவது அறிவின் துணைகொண்டு, அவற்றைப் பக்குவப்படுத்தி, சுவையைக் கூட்டிச் சமைத்து, உண்டு மகிழ்கின்றான்.
அன்று வாழ்ந்த மகரிஷிகள்,
விண்ணின் ஆற்றல்களைத் தன்னிடத்தில்
மற்ற உணர்வுகளுடன் கலக்கச் செய்து,
அவற்றின் இயக்கத்தில் தீமைகளை அடக்கி,
அவ்வுணர்வின் வழியே உணர்வை ஒளியாக மாற்றி,
விண்ணுலகம் சென்றனர். அத்தகையை வல்லமையினை
நமது குருநாதர் எமக்குக் காண்பித்தருளினார்.

மக்கள் தெளிவுறத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான், அக்காலத்தில் மகரிஷிகள், ராமாயணம், மகாபாரதம், போன்ற இதிகாசங்களையும், கந்த புராணம், சிவ புராணம், விநாயக புராணம், சக்தி புராணம் போன்ற புராணங்களையும் உருவாக்கி, இப்பிரபஞ்ச இயக்கத்தின் உண்மைகளையும், நாம் எண்ணும் என்ணங்கள் நமக்குள் தெய்வமாக நின்று, நம்மைச் செயல்படுத்தும் விதங்களையும் அப்புராணங்கள் வாயிலாக, நமக்கு உணர்த்தினார்கள்.

முக்கியமாக,  உயிரில் சேர்ந்திடும் உணர்வுகளுக்கு ஒப்ப, சரீர அமைப்பு எவ்வாறு உருவாகின்றது என்றும், மற்றும் மீண்டும் ஒரு சரீரம் பெறாவண்ணம், நாம் உயர்ந்த கதியினை எவ்வாறு பெறுவது? என்றும்,   ஒவ்வொருவரும் தெளிந்து உணர்வதற்காக, மகரிஷிகள் காவியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றைப் படைத்தனர்.

ஒவ்வொரு குணாதிசயங்களையும், செயல்களையும், அதனின் விளைவுகளை நாம் அறிந்துணரக் காப்பியங்களாகவும், கவிதைகளாகவும் தந்தருளிய மகரிஷிகள், நாம் அவைகளை மறக்காதிருக்க, அவற்றிற்கு உருவங்களைக் கொடுத்து, சிலைகளாக வடித்து, அவைகளைக் கோவில்களில் அமைத்து, நம்மை வணங்கச் செய்தனர்.

மற்றும், அந்தத் தெய்வ உருவத்தை நாம் வணங்குகின்ற பொழுது அந்த தெய்வ குணத்தை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வராஎன்று வேண்டுகின்ற பொழுது, நாம் அந்த தெய்வ குணங்களை, நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றோம்.

நாம் பெறவேண்டிய, உயர்ந்த தெய்வீக உணர்வுகளை, மீண்டும் உயிரில் பதிய வைக்கின்றோம். இவ்வாறு,  உயர்ந்த தெய்வ குணங்களை, நம்மிடம் மீண்டும், மீண்டும் பதியச் செய்வதற்கும், அவைகளுக்கு, நம் ஆன்மாவில், உயர்ந்த ஸ்தானத்தை அளித்திட வேண்டியும், தெய்வச் சிலைகளுக்கு, அபிஷேகங்களும், ஆராதனைகளும் நம் மகரிஷிகளால் ஏற்படுத்தப்பட்டன.

இவ்வாறு, கல்வியறிவு இல்லாதவர்கள்கூட இவ்வாத்மீகத் தத்துவங்களை அறிந்து, அவர்கள் வாழ்வில் பண்பட வேண்டும், பண்பு உயர வேண்டும் என்று, மகரிஷிகளால் படைத்தருளப்பட்டன.

ஆனால், இன்று பெரும்பாலோனோர்  “ஏதோ ஒரு தெய்வம்தான், நமக்கு அனைத்தையும் செய்கின்றது”, என்று கருதுகின்றனர்.

ஆனால், நம் செயல்கள் நிகழ்வதனைத்தும்,   நம் உயிரான கடவுளால்தான், என்பதை அறிய வேண்டும்.

மகரிஷிகளின் அருளசக்தி நான் பெற அருள்வாய் ஈஸ்வரா…”
என்று தியானித்திடும் பொழுதும் சரி, அல்லது
ஐயோ…, என் வாழ்க்கையில் இவ்வளவு சோதனைகளா?,
எனது கஷ்டங்கள் தீராதா….” என்று வேதனைப்பட்டாலும் சரி,
அங்கே  சாதனைகளையும், அல்லது சோதனைகளையும் உண்டாக்கிக் கொடுக்கின்ற குருவாக இருப்பது, நமது உயிர்தான் என்று அறிய வேண்டும்.

(பக்கம் 14-20)
பழனியம்பதியில், வேணுகோபால விநாயகர் கோயில் ஒன்று உண்டு. குருநாதர், அங்கே எம்மை அழைத்துச் சென்றார். அழைத்துச் சென்றவர், அங்கிருக்கும் மூல விக்கிரகத்தின்மீது ஏறி அமர்ந்து, “உன் மீது சவாரி செய்கின்றேன்” என்று கூறிச் சவாரி செய்யத் தொடங்கிவிட்டார்.

நாமோ அவரிடம், "சுற்றியிருப்பவர்கள் இக்கோலத்தைக் கண்டு ஏசப்போகிறார்கள். ஆகவே நாம் இங்கிருந்து சென்றுவிடுவோம்” என்று கூறினோம். அவரோ “நான் தான்டா எல்லாமே” என்று கூறி, பிறகு புரியாத மொழியில், ஓங்கிய குரலில் பேச ஆரம்பித்து விட்டார். பிறகு, சிறிது நேரத்தில் “விநாயகத் தத்துவத்தை” உபதேசிக்கத் தொடங்கி, உயிரின் பரிணாம வளர்ச்சியை உணர்த்தியருளினார்.

“மனிதன் இறந்தபின், மனிதனுடைய உயிராத்மா எந்நிலை பெறுகின்றது” என்று எமக்கு உபதேசித்தருளினார். அன்றிரவு பழனியிலுள்ள, ஒரு குளத்திற்கு எம்மை அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கிணற்றைக் காண்பித்தார். அக்கிணற்றைப் பற்றி, ஏற்கனவே யாம் அறிவோம். ஏனெனில், அக்கிணற்றில், ஒரு பெண்மணி தனது ஏழு குழந்தைகளுடன், விழுந்து இறந்துவிட்டது.

ஊரினுள், அக்கிணற்றை “நல்ல தங்காள் கிணறு” என்று அழைப்பர். மற்றும், அக்கிணற்றருகில் செல்ல வேண்டும் என்றாலே, பெரும்பாலானோர் அஞ்சுவோர். அத்தகைய கிணற்றைச் சுட்டிக் காட்டி, அந்த இடத்தில் எமக்கு உபதேசிக்கின்றார்.

குழந்தைகள் அலறித் துடித்து, இறந்த அந்த இடத்தில்,
அந்த நினைவலைகள் வருகின்ற பொழுது,
குழந்தைகளின் சரீரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகளை,
சூரியனின் காந்த சக்தி கவர்ந்து,
அந்த இடத்திற்குச் செல்கின்றவர்களிடம்,
அங்கே துடித்து இறந்தவர்களைப் பற்றிய
நினைவுகள் உதிக்கின்ற பொழுது,
சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்ட உணர்வலைகள்,
ஒலி அலைகளாக மாறி, குழந்தைகள் துடிப்பது போன்று,
தாய் அவர்களை அடக்குவது, போன்ற குரல்களைக் கேட்க நேர்கின்றது.

இவ்வாறு, ஒரு மனித சரீரத்தில் விளைய வைத்த உணர்வலைகளை, சூரியனின் கந்தச்சக்தி கவருமேயானால், அவ்வாறு கவரப்பட்ட உணர்வுகள், எவ்வாறு அலைகளாகப் படர்கின்றன?

ஒரு ஒலி நாடாவில் நமது உரையாடலைப் பதிவு செய்ததை, டேப்பில் போட்டுக் கேட்கின்றோமோ, அது போன்று, ஒருவர் இறக்கின்ற பொழுது, வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து, அலைகளைப் படரச் செய்வதும், பிறகு, நாம் அந்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வருகின்ற பொழுது, அந்த அலைகளை நாம் நுகர நேர்வதும், இன்னும் அதிகமாக நினைவலைகளைக் கூட்ட, அங்கே இறந்தவர்களுடைய உருவங்களைப் பார்க்க நேர்வதும் உண்டாகின்றது, என்று குருதேவர் எமக்கு உபதேசித்தருளினார்.

இப்பொழுதும், இரவிலும் என்னால் தூங்க முடியவில்லை, பகலிலும் என்னால் தூங்க முடியவில்லை. யாரோ என்னை அழைப்பது போன்றிருக்கின்றது என்றும், என் ஊரிலிருந்து தபோவனம் வருகின்ற வரையிலும், யாரோ என்னை அழைத்துக் கொண்டு, பின்தொடர்வது போன்று இருக்கின்றது என்றும், தபோவனம் நுழைந்தபின் அது போன்று இல்லை என்றும் கூறிக் கொண்டு, இந்நிலைகளால் துன்பப்படுபவர்கள் தபோவனம் வந்து, தங்கள் குறையை போக்கிக் கொண்டவர்களும் உள்ளனர்.

இவ்வாறு, நமது குருவின் அருளால், “மனிதனாக வளர்ந்தபின், இந்த சரீரத்தினுள் விளைந்த உணர்வலைகள் எவ்வாறு இருக்கின்றது?” என்ற நிலையையும், அதே சமயம் இந்த சரீரத்தை விட்டுச் செல்கின்ற நிலையில், அந்த உயிராத்மா எத்தகைய வேதனையைக் கொண்டிருந்ததோ, அதே வேதனைத் துடிப்புடன், அந்த உயிராத்மா துடித்துக் கொண்டேயிருக்கின்றது, என்பதை அறிந்துணர முடிந்தது.

தொடர்ந்து சற்குருதேவர், எம்மை அந்த இரவு முழுவதும் பல இடங்களைச் சுற்றிக் காண்பித்தார். அப்பொழுது, சில வீடுகளைச் சுட்டிக் காட்டி, அங்கு நிலவும் சூழல்களை எடுத்துரைக்க ஆரம்பித்தார்.
அக்குடும்பங்களில் வாழ்கின்ற அங்கத்தினர்களில் ஓரிருவர்
பிறிதொருவரை ஏமாற்றுகின்ற பொழுது,
ஏமாற்றப்பட்டவர் மரணமடைகின்ற பொழுது,
வெளியிடும் சாப உணர்வுகளை
வீட்டிலுள்ள காந்தப் புலன்கள் கவர்ந்து,
அவர்களுடைய ஒலி அலைகளைத்
தன்னிடத்தில் பதிவு செய்கின்றன.

மனித சரீரத்தில் ஒருவன், “பிறிதொருவன் எனக்குத் தீமையை விளைய வைத்தான் பாவி” என்ற உணர்வை ஓங்கி வளர்த்து, அதனின் பேரில் எண்ணிய எண்ணங்கள், வெளிப்படுத்திய உணர்வுகள் ஆகியவைகள் ஏமாற்றியவரின் சரீரத்தில் பதிவாகிவிட்டால், அவ்வாறு பதிவான உணர்வுகள் அவரிடத்தில் பெருகி, அதன் வழிகளில் அவர் குடும்பங்களில் படர்கின்றது.

மற்றும், அக்குடும்பத்திலுள்ள இளம் தம்பதிகளிடம், பிறிதொருவரை ஏமாற்றிய சம்பவங்களைப் பற்றிய பேச்சுக்கள் எழுகின்ற பொழுது, அவர்களுடைய கருவிலே இருக்கக் கூடிய குழந்தையிடமும் இவ்வுணர்வுகள் பதிவாகின்றது. இவ்வாறு, அவர் இட்ட சாப அலைகள் இரண்டு, மூன்று தலைமுறைக்குத் தொடர்கின்றது.

இவைகளை, யாம் இங்கு எடுத்துரைப்பதற்குக் காரணம், சமூகத்தில் பெரும்பாலானோர் யார் போனால் என்ன, யார் திட்டினால் என்ன என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் நல்லதே செய்து, வாழ்ந்து கொண்டிருந்தாலும், அது பிறருக்குத் தீமையை விளைவிக்கின்ற பட்சத்தில், அவர் நம்மைக் கடுமையாக ஏசுகின்றபொழுது, “இவன் இப்படித் திட்டுகிறானே பாவி...” என்று நாம் எண்ணுகிற பொழுது, அவ்வுணர்வுகள் நமக்குள் பதிவாகிவிடுகின்றன.

ஒருவர் சாபமிடும் நிலைகளில் பேசிக் கொண்டிருந்தாலும், “இப்படிப் பேசுகிறானே பாவி” என்றால் நமக்குள் அந்த சாப உணர்வுகள் விளைந்து, நாமும் சாபமிடும் நிலைகளுக்கே, சென்று விடுகின்றோம்.

இந்நிலைகள் சிறுகச் சிறுக நம்மிடம் விளைந்து, நம் குடும்பத்தில் பிறக்கின்ற சந்ததிகளுக்கு, காக்கா வலிப்பு சம்பந்தப்பட்ட நோய்களும், கை, கால் முடக்கங்களும் உண்டாகின்றன. பெண் குழந்தைகள் என்றால், மாறுகண் நோய்கள் உண்டாகின்றன. ஆஸ்துமா போன்றவைகளும், இவ்வழியாக வருவதே ஆகும்.

இவ்வாறு, குருநாதர் ஒவ்வொரு உணர்வின் இயக்கத் தன்மையையும், சாப அலைகளின் தொடர் பாதிப்புகளையும், எமக்கு மேலும் அறிவுறுத்தும் பொருட்டு, மறுநாள் பகலில், மீண்டும் அதே இல்லங்களுக்குமுன் எம்மை அழைத்துச் சென்று, அந்த இல்லத்தில் உள்ள அங்கத்தினர்களின் சரீரத்தில், அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளின் இயக்கத்தையும், அவர்களிடத்தில் செயலாகின்ற சாப உணர்வுகளின் இயக்கத்தையும், எக்ஸ்ரே படம் போன்று, அவர்களின் சரீரத்தை ஊடுருவிப் பார்க்கும் தன்மையை எமக்களித்தார்.

இவ்வாறு, ஒவ்வொரு இல்லத்திலும்
நோய் வருவதும், சாபங்கள் இடுவதும்,
அந்தச் சாப நிலைகளால் குடும்பம் நசிந்து கொண்டிருப்பதும்,
நம் முன்னோர் காலத்தின் சாப நிலைகளால்,
பின் வரும் சந்ததியினர் அனுபவிக்க நேருவதும்,
போன்ற நிலைகளை எமக்கு உணர்த்தியருளினார்.

மேலும், இந்தச் சாப அலைகளால் தாக்கப்படுபவர்களிடம், அவ்வுணர்வுகள் விளைந்து, உடலில் நோயாகி, அச்சாப உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு, அந்த ஆன்மா எவ்வாறு துடிக்கின்றது? என்கிற நிலையை, குருநாதர் எமக்குக் காண்பித்தருளினார்.

மேலும், மனிதனாக இருந்து, பிறிதொருவர் அழியவேண்டும் என்று கோபம் கொண்டு சாபமிடும் நிலைகளில், அவர் இறந்தபின், அவருடைய உயிராத்மா எந்த உடலுக்குள் சென்றாலும், அவர் இட்ட சாபம் போலவே, அங்கே, மனிதனைக் கருவாக்க விடாதபடித் தடுத்து, அந்த உடலில் தீய விளைவுகளை விளையச் செய்து, அந்த உணர்வின் தன்மையை, இதனுடைய உணர்வுகளுக்கு உணவாகச் சேர்க்கின்றது.
இவ்வாறு உணவாகச் சேர்த்தபின்,
அந்த உடலைவிட்டு வெளியேறும் அந்த உயிரான்மா,
மீண்டும் மனிதனாகப் பிறப்பதில்லை.
இதுபோன்று, பிறிதொருவர் அழியவேண்டும், நாசமாக வேண்டும்,
என்று எவரொருவர் எண்ணுகின்றாரோ,
அவருடைய உயிராத்மா சரீரத்தை விட்டு,
வெளியே வந்த பின்னும் வேதனையடைகின்றது.

இந்த உயிராத்மா, பிறிதொரு மனிதனின் சரீரத்திற்குள் புகுந்தாலும், அவரிடத்திலும் மனிதப் பிறவியை மீண்டும் பெறமுடியாத நிலையை, உண்டாக்கி விடுகின்றது. ஆகவே இதைப் போன்று நாம், நம் உடலை விட்டுப் பிரியும் பொழுது, நமது உயிராத்மவில் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கு ஒப்பத்தான், அந்த இடத்திற்கு, நம் உயிர் நம்மை அழைத்துச் செல்கின்றது என்றும், அங்கே எவ்வாறு அது வேதனைப்படுகிறது; வேதனையடையச் செய்கிறது என்றும், நம் குரு காட்டிய வழிகளில், நாம் தெரிந்து கொண்டோம்.

இனி,  ஒவ்வொரு நொடிப்பொழுதும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறுவோம். உயிரோடு ஒன்றும் உணர்வுகளை, ஒளியாக மாற்றிடுவோம், பிறவியில்லா நிலை அடைந்த, சப்தரிஷிகளுடன் ஒன்றி வாழ்வோம்.

எந்த நேரம், இந்த உடலை விட்டு நம் உயிராத்மா பிரிந்தாலும், சப்தரிஷி மண்டலங்களுடன் இணந்து, அழியா ஒளிச்சரீரம் அனைவரும் பெறுவோம், என்று நாம் உறுதி கொள்வோம்.

 (பக்கம் 20-26)
குருதேவர், ஒருமுறை எம்மை ஆனைமலைக் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று, இத்தனாவது மைலில், இன்ன மரத்தில் இது போன்று இருக்கும் மச்சத்தை, (ஒரு அடையாளம்) எடுத்து வா என்று சொல்கிறார். அவர் சொன்ன நேரம், மாலை ஆறு மணி இருக்கும். அந்த நேரங்களில், காட்டு மிருகங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆகவே, குருதேவர் சொன்னை இடத்திற்கு, எவ்வாறு செல்வது என்று பயந்தோம்.

நான் எது சொன்னாலும் செய்வேன் என்று சொன்னாயே, இபொழுது, “முடியாதுஎன்று சொல்கிறாயே, “மறுக்காதே, சென்று வாஎன்று கூறினார். யாமும் பயந்தபடி, சிறிது தூரம் நடந்தோம். பிறகு இங்கே வாஎன்று எம்மை அழைத்தார்.

அழைத்தவர் எம்மை அருகில் நிறுத்தி, சில ஆற்றல்களை யாம் பெறும் வண்ணம் உபதேசங்களைக் கொடுத்து, “இப்பொழுது நான் சொல்லிக் கொடுத்தவைகளை உபயோகப்படுத்து. எதிரே தெரியும் மரம் கீழே சாயும்என்றார்.

அவ்வாறே, அவர் சொல்லிக் கொடுத்தவைகளை எதிரே தெரியும் மரத்தின் முன் செய்ய, அந்த மரம் கீழே சாய்ந்தது. பிறகு குருதேவர், “இப்பொழுது காட்டினுள் செல், நான் சொன்னதை எடுத்து வாஎன்றார். எமக்கு, இப்பொழுது தைரியம் பிறந்தது, துணிவுடன் காட்டினுள் நடந்தோம்.

ஏற்கனவே, வேட்டைக்காக காடுகளுக்குள் சென்ற அனுபவம், எமக்கு உண்டு. யானைகள் அருகே நடமாடும் பொழுது, கீழே காற்று வராது, மரக்கிளைகள் அசையும் ஒலி கேட்கும். அந்த அறிகுறிகளை வைத்து, யானைகளின் நடமாட்டத்தின் தூரத்தைக் கணிப்போம். இதனை அடிப்படையாகக் கொண்டு, யாம் நாலாபுறமும் கவனித்தவாறே சென்று கொண்டிருந்தோம்.

உற்றுக் கவனிக்கும் பொழுது, தூரத்தில், யானைகள் காதை ஆட்டாமல், அசைவில்லாமல் நின்று கொண்டிருந்ததைக் கவனிக்க நேர்ந்தது. இருந்தாலும், எமக்கு நிறைய தைரியம் இருந்தது. ஏனென்றால், யாம் விரலை அசைத்தால் போதும், எதனையும் கீழே சாய்க்கும் வலிமை உள்ளதே என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடன், யாம் முன்னேறிச் சென்று கொண்டிருந்தபோது குருதேவர், “ஏய் தெலுங்கு ராஜ்ஜியம்என்று கூவி அழைத்தார்.

குருதேவர் எம்மைத் திட்டவேண்டும் என்று கருதினால் தெலுங்கு ராஜ்ஜியம்என்றுதான் திட்டுவார். இப்பொழுதும் தெலுங்கு ராஜ்ஜியம்எங்கே போகிறாய்? என்று கேட்டார்.

நீங்கள் சொன்ன மச்சத்தை எடுக்கச் செல்கிறோம் என்றோம்யாம்.

இப்பொழுது நீ என்ன நினைத்தாய்?” என்று கேட்டார்.

அதற்கு யாம், நீங்கள் கொடுத்த ஆற்றலைக் கொண்டு, யானைகளைச் சாய்க்கப் போகிறேன்என்று பதில் கூறினோம்.

அதற்கு குருதேவர், நீ இப்பொழுது யார் வீட்டிற்குள் செல்கின்றாய் என்று தெரிகின்றதா?, நீ வாழும் வீட்டில், அந்நியன் ஒருவன் நுழைந்து விட்டால், உனக்குக் கோபம் வருமல்லவா, அதைப் போன்றுதான் யானைகளுக்கும், அது வாழும் காடுதான் அதற்கு வீடு. அவ்வாறு இருக்கையில் அதனுடைய வீட்டிற்குள் சென்றால், அதற்குக் கோபம் வருமல்லவா?.

நீ உன்னுடைய காரியமாகச் செல்கின்றாய்,  
உனக்குள் வலிமை இருக்கின்றது என்ற காரணத்தினால்,
பிறிதொன்றை வீழ்த்திவிடும்,
அழித்துவிடும் எண்ணம் கொள்வாயானால்,
அந்த எண்ணம் உனது உயிரான ஈசனால் இயக்கப்பட்டு,
அந்த உணர்வின் சக்தி, உன் உடல் முழுவதும் படருகின்றது.
இதனால், உனக்குள் உள்ள நல்ல சக்தியை இழக்கின்றாய்”. 

நீ யானையிடம் இருந்து தப்பித்தாலும், தைக் கொன்று விடவேண்டும் என்று, அதன்மீது ஆற்றலை உபயோகப்படுத்திய உணர்வின் சத்து, உனக்குள் சென்று,
உன்னுள் உள்ள நல்ல உணர்வுகளை,
மாய்க்கும் விதத்தை அறிந்துகொள் என்று அங்கே உணர்த்துகிறார்.

எமக்கு ஒன்றும் புரியவில்லை. 
வலிமை இருக்கிறது என்று,
மற்றொன்றைக் கொல்ல முற்படக்கூடாது.
ஆனால், வருகின்ற ஆபத்திலிருந்து, எப்படித் தப்பிப்பது? என்று குழம்பினோம்.

அதற்கு குருதேவர், “இவ்வளவு பெரிய ஆற்றல், உனக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதனை, நீ, மற்றொன்றை மாய்த்திடும் நிலைக்கு பயன்படுத்துவேயானால், உன் உணர்வுகள் எங்கே போகும்?

எவ்வாறு நீ உனக்கு உணர்த்திய உணர்வின் ஆற்றல்களை பெறப் போகின்றாய்?“ என்று அவர் கேட்கிறபொழுதுதான், என்ன செய்வது என்று தெரியாமல்,  குருவை மறந்துவிட்டது நினைவுக்கு வருகின்றது.

குரு அருளின் துணைகொண்டு செயல்பட வேண்டிய நாம்,  குரு நமக்குப் பெரும் ஆற்றல் கொடுத்திருக்கிறார் என்று, அதைப் பெரிதாக எண்ணி, குருவை மறந்து, பிறிதொன்றை வீழ்த்திடும் அசுர உணர்வைத்தான் எண்ண முடிந்ததே தவிர, என்னால் நல்ல உணர்வை, அங்கே எண்ண முடியவில்லை,  என்பதை நிதர்சனமாகவே காட்டுகின்றார்.

யானையிடமிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும்?  என்று எண்ணி கண்ணை மூடி தியானிக்கும் பொழுது, அதனின் உணர்வலைகளை அறிய நேரிடுகின்றது.

அதாவது, “யானையின் மணத்தை நுகர்,  
அதனின் உணர்வின் சக்தி உனக்குள் சேரும்.
யானைக்கும்,ர்வின் ஆற்றலை உணரும் சக்தி உண்டு.
அப்பொழுது, அதனின் மணத்தை நீ நுகரும்பொழுது,
அதனின் சம எடையாக, வருகின்றாய். 
அதனால், யானை உன்னை ஒன்றும் செய்யாதுஎன்று கூறுகிறார்.
பிறகு யானையின்  மணத்தை, என் மீது பரவச் செய்கின்றார்.

யானைகள் காதை விடைத்துத் தூக்கிவிட்டால், அது கோபத்தில் இருக்கிறது, ஆளைப் பிடித்துக் கொன்றுவிடும் என்பது பொருள். யாம், அதே சிந்தனையில் இருந்து கொண்டிருக்கின்ற பொழுது, எம்மை உரசியவாறே, சுமார்  13  யானைகள் எம்மைக் கடந்து செல்கின்றன.

அப்பொழுது குருதேவர் சொல்லுகின்றார், நீ எதை, எதனுடைய நிலைகளில் வலுப்பெறச் செய்ய வேண்டும்,  குரு காட்டிய வழி எது?

குருவினுடைய சக்தியை உணர்ந்து கொண்டாய் என்றால், அந்தக் குருவின் துணை கொண்டு, எப்படி இயங்க வேண்டும்? என்பதையெல்லாம் உணர்த்தி, குருவின் துணையுடன் நீ செயல்படும் பொழுது, அனைத்தையும் பெறும் தகுதி பெறுகின்றாய். 
ஆகவே, நீ இவைகளைப் பெற விரும்புகின்றாயா?
அல்லது மற்றொன்றை வீழ்த்திவிட்டு,
அதனால் உனக்குப் புகழ் தேடும் நிலையும்,
ஆணவம் பெறும் நிலையும் பெற விரும்புகின்றாயா? என்று கேட்டு,
எதைப் பெற வேண்டும் என்று, உணர்த்தி அருளினார்.

பிறகு, குருதேவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, மச்சத்தை எடுத்து வர நடந்தோம். அவர் சொன்ன விதமே, இருந்த மச்சத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வருகின்ற பொழுது, எமக்கு எதிரே, மலைப்பம்பு ஒன்று ஊர்ந்து வரக் கண்டோம்.

அது சீறி வரும் நிலையைக் கண்டு, எமக்குள் இருந்த தைரியம் குறைவதை அறிகின்றோம். யானைக்கு ஒரு விதமாகத் தப்பித்தோம், இந்தப்  பாம்பிடம் இருந்து, எவ்வாறு தப்பிப்பது என்று சிந்தித்தோம்.

இதையும், குருவின் பலம் கொண்டுதான் சமாளிக்கவேண்டும் என்று எண்ணுகையில்,  குரு எக்குள், அந்த பாம்பைக் கண் கொண்டு பார்த்து, நீ, எந்த உணர்வை அதன் மேல் செலுத்துகின்றாயோ, அந்த உணர்வின் அலைகள், அதன் பாதையைத் திசை மாறச் செய்யும்..

அப்பொழுது,  அதன்மீது பரிவின் எண்ணம் கொண்டு, அது நகர்ந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைப் பாய்ச்சு  என்று உணர்த்துகிறார்.

அவ்வாறே, அதைக் கண் கொண்டு பார்த்து, உணர்வின் தன்மையை குருவழி கொண்டு, தன்மீது செலுத்துகின்ற பொழுது, அப்பாம்பானது விலகிச் செல்கின்றது. மச்சத்தை, இறுகப் பிடித்தவாறே வருகின்றோம்.

இவைகளெல்லாம் நம் குருதேவர் நம் அனுபவத்திற்குக் கொடுத்து,  
மனிதருடைய எண்ணத்திற்கு உள்ள வலிமையையும்,
மனிதர் தாம் எடுத்துக் கொண்ட உணர்வை,
உயிர்   இயக்கும் விதங்களையும்,
உணர்வின் தன்மை, நமக்குள் உணர்வின் வித்தாக விளைந்து.
அதை எண்ணத்தால் எண்ணப்படும்பொழுது
அது நம்முடைய செயலாக ஆக்கம் பெறுகின்றது  என்பதை
எமக்குத் தெளிவுபடுத்தவே,
எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

(பக்கம் 26-33)
ஒரு தாவரம், தனது சத்தினை இழந்து வாடத் தொடங்கும் போது, அவற்றிற்கு உரங்களை இட்டு, பிற மருந்துகளைத் தெளிக்கின்ற பொழுது, அந்தச் செடி அதனைத் தன்னுடன் இணைத்தபின், மீண்டும் தனக்குத் தேவையான சத்தைக் காற்றிலிருந்து எடுத்துக் கொள்கின்றது.

அது போன்றே, நமது நல்ல உணர்வுடன் மெய்ஞானிகளின் உணர்வை இணைத்து, அந்தச் சத்தான நிலைகள் வரும்போது, அந்த எண்ணத்தால், காற்றிலிருந்து அது எடுக்கப்படும் பொழுது, உயிர் அதனின் வலுக்கொண்டு இந்த உடலில், உணர்வின் தன்மையை எப்படி இயக்குகின்றது? என்பதை, எமது குருதேவர் எமக்குத் தெளிவுபடுத்தினார்.

பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்கிறோம். மனிதன் ஆறாவது அறிவின் துணைகொண்டு, விஞ்ஞான அறிவைத் தன்னிடத்தில் வளர்த்து, பல உணர்வின் சத்தை ஒன்று சேர்த்துப் புதுப் புது, சத்தான வித்துக்களை உருவாக்குகின்றான்.

அது போன்றே மெய்ஞானிகளின் மெய்யுணர்வின் தன்மையைத் தனக்குள் பெற்று, தன்னிடத்தில் உள்ள சோர்வடைந்த உணர்வுகளுடன் இணைத்து, அதனை, அதி சக்தி வாய்ந்ததாகத் தன்னிடத்தில் வளர்த்தபின், அதனின் நினைவலைகளைக் கூட்டுகின்ற பொழுது, நம்முடைய சுவாசம், ஆத்மாவாக எவ்வாறு இயக்கம் பெறுகின்றது? என்பதை குருதேவர் எமக்கு எடுத்துரைக்கின்றார்.

குருவின் வழியில், மெய்ஞான உணர்வை ஈர்க்க வேண்டும். எதிர்நிலைகளைப் பாச உணர்வால் இணைக்க வேண்டும். அந்த உணர்வின் சக்தியினை, நம் எண்ணத்தால் ஒரு வித்தாகப் பதியச் செய்யும் பொழுது, அவ்வாறு எண்ணிய உணர்வுகள், காற்றிலே படர்ந்துள்ள அருள்ஞானியின் உணர்வை ஈர்த்து, நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

இந்த உணர்வின் மணம், எதிரான நிலைகளைத் தன்னருகிலே நெருங்க விடுவதில்லை. அது போன்றே, உணர்வின் சத்தான இந்த மணங்களை அதிகமாக்கும் பொழுது, இந்த மணத்திற்கு எதிர் நிலையான மிருகங்களும், விலகிச் செல்கின்றன.

இவ்வாறு, காட்டிற்குள் கூட்டிச் சென்று, பல உபதேசங்களை உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, இரவில் சுமார் 12 மணி இருக்கும். திடீரென்று, காட்டிற்குள் ஒளி வெள்ளம் தெரிந்தது. எமக்கு வெகு ஆச்சரியமாக இருந்தது.

அவ்வொளி வெள்ளத்தின் நடுவே, காளி உருவம் தெரிந்தது. அது மறைந்து, விலை உயர்ந்த கற்கள், ஆபரணங்கள் குவியலாகத் தெரிந்தது. அவைகள் வைரங்கள், வைடூரியங்கள், நகைகள் போன்றவைகளாக இருந்தன. குருதேவர், எம்மிடம் வந்து அவைகளைச் சுட்டிக் காட்டி, “இவைகள் பொய்யல்ல நிஜமானவைகள்தான், எடுத்துக் கொள்” என்றார்.

எம்மால் நம்ப முடியவில்லை. ஏனென்றால், இதற்கு முன்னால் இவ்வளவு நகைகளை யாம் கண்டதில்லை. மேலும், குருதேவர் தொட்டுப் பார் என்று கூறி, “நீ காண்பது கனவல்ல நிஜம்தான்” என்று சொல்லி, அதை நிரூபிக்க எம்மை நறுக்கென்று கிள்ளினார். எமக்கு வலி தெரிந்தது. நகைகளைத் தொட்டுப் பார்த்தோம், நிஜமானவைகள்தாம் என நம்பினோம்.

“இவைகளெல்லாம் உனக்குச் சொந்தமாக்கினால் என்ன செய்வாய்? என்று குருதேவர் எம்மிடம் கேட்டார்.

அவர் கேட்ட வேகத்தில், யாம் சொன்ன பதில் “ஏழைகளுக்கு தர்மம் செய்வேன்” என்றோம். பதில் சொன்ன வேகம்தான், எமக்குப் படாரென்று ஓர் அடி கன்னத்தில் விழுந்தது. அடித்தவர் குருதேவர், யாம் கதிகலங்கி விட்டோம். அந்த நிமிடம், அனைத்துப் பொருள்களும் மறைந்து போயின.

அதைத் தொடர்ந்து, குருதேவர் கூறினார். நீ ஒரு பொருளைத் தர்மம் செய்கிறாய் என்று கூறினால், அதைத் தொடர்ந்து உன்னைத் தேடி வருபவர்கள், தங்களுடைய கஷ்டங்களைச் சொல்லி, “நான் சாகப் போகிறேன், என்னுடய கஷ்டங்களிலிருந்து மீளவே வழி தெரியவில்லை, நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சுவார்கள்.

நீயும் இரக்கப்பட்டுத் தானம் செய்கிறாய் என்றால், அவர்களுக்குப் பொருளைப் பற்றித்தான் ஞாபகம் வருமே தவிர, ஞானத்தைப் பெறவேண்டும் என்ற ஞானம் அவர்களுக்கு உண்டாகாது.

ஆகையால், நீ எதைத் தானம் செய்ய வேண்டும்? நீ பிறருக்குப் பொருள் அடிப்படையில் உதவ வேண்டும் என்று முற்பட்டால். பிறகு உன்னைத் தேடி வருபவர்கள், எனக்கு ஏராளமான துன்பங்கள் இருக்கின்றன என்று, இல்லாத துன்பங்களை இருப்பது போலச் சொல்லிக் கொண்டு வருவார்கள். நீயும் இரக்க உணர்வு கொண்டு, அவர்களுக்கு தானம் செய்து கொண்டிருந்தால், அவர்களுக்கு ஆசைதான் பெருகும்.

மனிதர்களுடைய தேவைகளைப் பொருள்களை அள்ளிக் கொடுத்துத் தீர்த்து வைக்க முடியாது. ஒரு தேவையை நிறைவேற்ற மனிதருக்கு மற்றொரு தேவையும் உருவாகும்.

ஆகவே, அவர்கள் அறியவேண்டியது, பெற வேண்டியது ஒன்றே ஒன்று. அது, அகப்பொருளின் உணர்வின் தன்மையுடன் மெய்ஞான உணர்வின் தன்மையைக் கலந்து, வளர்த்து, இருளைப் போக்கிப் பொருளைக் காணும் நிலையைப் பெறவேண்டும். மெய்ஞானிகளின் உணர்வுகள் நம்மிடத்தில் இருக்கின்ற துன்பங்களை நீக்கக் கூடிய உணர்வுகளாகச் செயல்படுகின்றன.

புறப் பொருளைத் தேடாது,
அகப்பொருளைத் தேடும் பொழுது,
புறப் பொருள் தானே வரும்.
புறப் பொருளைத் தேட வேண்டிய அவசியமே இல்லை.


(பக்கம் 34-38)
நம் உயிரைக் கடவுளாக எண்ணும் பொழுது, பிற உயிர்களையும் நம் உயிர் போன்று கடவுளாக எண்ணி, உடலை ஆலயமாக மதித்து, அவர்களும் அந்த மெய் உணர்வின் சத்தைப் பெறவேண்டும் என எண்ண வேண்டும்.

வியாசர் அருளிய, கீதா தத்துவமான “நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய்” என்பதை மனதிலிருத்த வேண்டும். மற்றவரெல்லாம் வாழ வேண்டும், வளரவேண்டும் என்று எண்ணுகின்ற பொழுது, நாமும், நம்மை நல்வினைக்கு உயர்த்தும் நல் உணர்வுகளும் வளர்ச்சி பெறுகின்றன.

ஒரு செடிக்கு நீர் ஊற்றி, நல்ல உரமிடுகின்ற பொழுது, அந்தச் செடி அதனைக் கவர்ந்து, தன்னை வளர்த்து நல்ல நெல் மணிகளை வெளியிடுகின்றது. அது போன்று, அருள்ஞானிகளின் உணர்வுகளை நம்மிடத்தில் பெற்று, அந்தச் சக்திவாய்ந்த உரத்தை உங்களுக்குள் ஏற்றி, உங்களுடைய உணர்வின் நினைவலைகளை நீங்கள் கூட்ட வேண்டும்.

அவ்வாறு, நீங்கள் கூட்டும் பொழுது, செடிகள் எவ்வாறு, தங்களுடைய உணர்வின் ஆற்றலைக் காற்றிலிருந்து எடுத்துக் கொள்கின்றதோ, அது போன்று, அவ்வருள் ஞானிகளின் அருளாற்றல் உங்களிடத்தில் வலுப்பெறுகின்றது. இவ்வாறுதான், எமக்கு நம் குருநாதர் செய்தருளினார்.

உங்களிடத்தில் தீய உணர்வு தலைதூக்குகின்ற பட்சத்தில், அதிலிருந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெறுவதற்கே, இந்த அருள்வாக்குகளை, உங்களுக்கு உரம் ஏற்றுவது போன்று, பதிவு செய்கின்றோம்.

இவ்வாற்றலை எல்லோரும் பெறவேண்டும் எண்ணுகின்ற பொழுதும், இத்தகைய நிலைகள் யாரெல்லாம் பெறவேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ, அப்பொழுதும்,
உங்களிடத்தில் விளையும் உணர்வின் சத்தின் தன்மைகள்
பூமியில் படர்ந்து, அதைத் திரும்ப எண்ணுகின்ற பொழுது,
அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் கிடைக்கின்றது.

ஒவ்வொரு முறையும், உங்களுக்கு இதைத் திரும்பத் திரும்பச் சொல்வதற்குக் காரணம், வாழ்வில், நாம் யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் ஒருவர் வேதனைப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும், அந்த உணர்வுகள் நமக்குள் வேதனைப்படும் உணர்வாகப் பதிவாகிவிடுகின்றது. பின் அதிலிருந்து, மீளமுடியாத துயரமாக மாறிவிடுகின்றது.

உடலில் ஏற்பட்ட அழுக்கைச் சோப்புப் போட்டுக் குளித்து நாம் நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றோம். அது போன்று, உணர்வில் ஏற்பட்ட அழுக்கை அகற்றி, உணர்வின் தன்மையை ஒளியாக்கி, விண் சென்ற, அருள்ஞானியின் உணர்வை நீங்கள் பெறவேண்டும். உங்களுடைய உணர்வுக்குள், இதைச் சேர்த்து உரமாக ஆக்கவேண்டும். உங்களுடைய நினைவைக் கொண்டுதான், இதைப் பெறவேண்டும்.

அவ்வாறு, உங்களுக்குள் பதிந்த நிலை கொண்டுதான், உங்கள் வாழ்க்கையில் உண்டான சலிப்பு, சஞ்சலம், சங்கடம், வெறுப்பு போன்ற துரித நிலையில் இயங்கக் கூடிய, உணர்வுகளின் இயக்கத்தைக் குறைக்கக்கூடிய சக்தியாக, அந்த அருள்ஞானிகளின் அருள் சக்தி இணைக்கப்படுகின்றது.

ஆகையால், அந்த மகரிஷிகளின் அருள்சக்தியைப் பெறவேண்டும், என்று விண்ணை நோக்கி ஏங்கி, அந்த உணர்வின் தன்மையை உயிருடன் ஒன்றி, உட்செலுத்த வேண்டும்.
அவ்வாறு உட்செலுத்தப்பட்ட உணர்வின் தன்மையை,
நம் உடலிலிருந்து ஆன்மா பெறும் நிலையையே,
பிராணயாமம் என்று நாம் அறிதல் வேண்டும்.

குருதேவர், எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று
பல இன்னல்களுக்கிடையில் எம்மை நிறுத்தி,
இன்னல் எவ்வாறு உண்டாகின்றது?
அதிலிருந்து மீளும் வழி என்ன? என்று
யாம் உணர்ந்து செயல்படவேண்டும் என்பதற்காக
எமக்கு உபதேசித்ததையே,
உங்களுக்கு, உங்கள் வாழ்வில் எதிர்வரும் இன்னல்களிலிருந்து, உங்களை, நீங்களே தற்காத்து, மீண்டு வாழும் திறனைப் பெறவேண்டும் என்று, உபதேசிக்கின்றோம்.

மனிதனாக உருவாக்கி, மனிதனின் உணர்வில் தெளிந்திடும் நிலையாக உருவாக்கும் உணர்வின் ஆற்றல், உங்களுக்குள் பெருகி, அந்த மெய்ஞானிகளின் உணர்வும் பெருகி வளரவேண்டும்.

மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள் அதிகமாகச் சேர்ப்பித்து, அது ஒவ்வொரு நிமிடமும், மனித வாழ்க்கையில் பிற உணர்வுகளை அறிந்திடும் செயலாக உணர்ந்தாலும், அந்தத் தீமை நமக்குள் சேர்ந்திடாது, மெய்ஞானியின் உணர்வை விண்ணை நோக்கி ஏங்கி, அந்த நினைவின் சக்தியை, நாம் உட்புறமாக உடலுக்குள் செலுத்த வேண்டும்.
அவ்வாறு உட்புறமாகச் செலுத்துகின்ற பொழுது,
உள் நின்று கொதிக்கும் நிலைகள்
நம் உடலிலிருந்து வெளிப்படும் பொழுது,
நம் ஆன்மா அதைக் கவர்ந்து கொண்டு,
அடுத்த செயலை உணர்த்தும், 
இந்தத் தீமையான உணர்வுகளைப் பிளக்கச் செய்து,
ஞானிகளின் உணர்வலைகளை, நமக்குள் நம் உயிர் கவர்ந்து
உணர்வின் சத்தாக, உணர்வின் ஒளி அலைகளை மாற்றிடும் நிலையைத்தான், நரசிம்ம அவதாரம் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

விஞ்ஞானி அணுவைப் பிளக்கின்றான். அதைச் சக்திவாய்ந்த அணுகுண்டாக மாற்றுகின்றான். தன் வலிமையை, உலகிற்குக் காட்டப் பிற நாடுகளை அழித்திடும் சக்தியாக, அதைப் பயன்படுத்துகின்றான்.

ஆனால், மெய்ஞானிகளோ தம்முள் நுழைந்த, தீமைகளைப் பிளந்தனர். தீமையற்ற உணர்வை, உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றி, விண்ணுலகம் சென்றனர். விண்ணிலே, தன்னிடத்தில் வருகின்ற தீமைகளைப் பிளந்து, என்றும் ஒளியின் சுடராக நிலைத்திருக்கின்றனர்.

(பக்கம் 39-42)
இம்மனிதச் சரீரத்தில் உயிர் இருக்கும் வரைதான்,
இந்தச் சரீரத்திற்கே மதிப்பு.
இவ்வுடலை விட்டு உயிர் பிரிந்த பிறகு,
இந்தச் சரீரத்திற்கு மதிப்பில்லாமல் போய் விடுகின்றது.

ஆகவே, இந்த உயிர் நம் சரீரத்தில் இருக்கும் பொழுதே, அவ்வுயிரைக் கடவுள் என மதித்து, அதனுடன் ஒன்றிய உணர்வுடன் நாம் செயல்படுவோமேயானால், அவ்வுயிர் பெற வேண்டிய உயர்நிலைகளை அடைகின்றது. அதைச் செய்வதற்கு நமக்குத் துணிவு வேண்டும்.

இந்தச் சரீரத்தில் எந்த உணர்வை விளைய வைத்தோமோ, அது சாவதில்லை. அது சாகாக்கலை. என்ற தன்மையில் இயங்கி, நம் உயிர் மறு சரீரம் பெறும் தன்மையை, நிர்ணயம் செய்கின்றது.

துருவ மகரிஷி இன்றும் விண்ணிலே ஒளியின் சுடராக நிலைத்திருந்து, விண்ணிலிருந்து வரக்கூடிய நஞ்சினைக் கவர்ந்து, தமது ஆகாரமாக எடுத்துக் கொள்கின்றார்.

அந்த நஞ்சு, அம்மகரிஷியின் உணர்வின் ஒளியாக மாறுகின்றது. அந்த நஞ்சு, இவருடைய உணர்வை வேகவைப்பதில்லை. ஆகவே இது வேகாக்கலை.

இந்த நூற்றாண்டில் பாடப்பட்ட, இராமலிங்க அடிகளாரின் பாடலை, நாம் ராகம் போட்டு மட்டுமே பாடுகின்றோம். ஆனால், அதன் உட்பொருளை அறிந்துகொள்ள, முன் வருவது இல்லை. இன்று, நாம் சாகாக்கலையில் தான் இருக்கின்றோமே தவிர, வேகாநிலைக்கு நாம் போகவேயில்லை.

“இரு உன்னை நான் அழித்து விடுகின்றேன்.” என்கிறபொழுது, அது நம் உயிரில், சாகாக்கலையாக இயக்கம் பெறுகின்றது. இறந்தபின், இதுவே பிற சரீரத்தினுள் புகுந்து, அங்கேயும் இந்தச் சாகாக்கலையை உண்டாக்கிவிடுகின்றது. மேலும் மந்திரங்கள், தந்திரங்கள் என்று, இதில் எதை நம்மிடத்தில் பதிவு செய்தாலும், அவைகளும் சாகாக்கலையாகவே இயக்கம் பெறுகின்றது.

சாகாக்கலை என்கிற பொழுது,
எந்த நஞ்சை நாம் வளர்த்துக் கொண்டோமோ,
அந்த நஞ்சின் தன்மை கொண்டு
நாம் மறு பிறவியைப் பெறுகின்றோம்.

உதாரணமாக, நாம் நம் உயிரில்  சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்துக்கேற்ப, மறு பிறவியாகப் பாம்பின் சரீரத்தைப் பெறுகின்றோம் என்றால், அந்த பாம்பின் சரீரத்தில் வாழ்ந்திடும் போது, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வை எடுத்து, சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்துக்கேற்ப பாம்பின் சரீரத்திலிருந்து பிரியும் உயிர், மறுபிறவியைப் பெறுகின்றது.

ஆகவே, அங்கே பாம்பினுடைய உணர்வுகள் சாகாக் கலையாகச் செயல்படுகின்றது, என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.              அன்று ஞானிகள், இம்மனிதச் சரீரத்தில் ஜீவித்த காலத்திலேயே, உணர்வுகள் அனைத்தையும் ஒளிச் சரீரமாக்கி, வேகாநிலையைப் பெற்றவர்கள்.

நம் உயிர் தீயிலே வேகுவதில்லை. ஆனால், புழுவிலிருந்து மனிதச் சரீரம் பெறும் வரையிலும், தம்மைக் காத்திடும் நிலையாகப் பல கோடி உணர்வுகளை தம்மிடத்தில் சேர்த்து, இன்று மனிதச் சரீரம் பெற்றிருந்தாலும், குடும்பத்தில் வெறுப்பான நிலைகள் உருவாகி விட்டால்,  நெருப்பிலே குதித்துத் தன் உயிரை மாய்த்து கொள்ளலாம் என்று சிலர் எண்ணுவார்கள். தீ, இவ்வுடலை அழிக்கலாம். ஆனால், இவ்வுயிரை அழிக்க முடியாது.

நெருப்பு என்பது நஞ்சு. இதனால், உயிரில் நஞ்சின் தன்மை அதிகமாகின்றது. தீயில் உடலினை எரித்துக் கொண்ட இந்த உணர்வின் தன்மை, உயிருடன் ஒன்றி, அது நெருப்பின் தன்மையை அடைகின்றது. மீண்டும், இந்த உயிராத்மா எந்த உடலுக்குள் சென்றாலும், அந்த உடலையும் எரியச் செய்து, அவரிடத்தில் வாழும் ஜீவனைப் பிரிக்கின்றது.

இது போன்று, உணர்வுகள் சாக வைக்கப்பட்டு, நஞ்சின் தன்மை சாகாக் கலையாக இயங்குகின்றது. இவ்வாறு சாகாக்கலையை அறிந்த நாம், வேகாநிலையைப் பெற பாடுபடவேண்டும்.

உயிரின் உணர்வில், எக்காரணம் கொண்டும் நஞ்சோ அல்லது நெருப்போ அணுகாது, காத்துக் கொண்டவர்கள் ஞானிகள்.

அந்நிலையைத் தன்னிடத்தில் பெற்ற, மகாஞானிகள் கண்டுணர்ந்த தன்மையைத்தான் உங்களிடத்தில் பெறச் செய்து, அதையே உங்களுக்கு உரமாக ஆக்கி, அம்மகரிஷிகளின் அருளுணர்வுகளை உங்களிடத்தில் படரச் செய்வதற்குத்தான் ”குரு பூஜை விழா”.

“போகாப் புனல்” என்பது பிறிதொரு எந்தப் பிறவிக்கும் போகாதிருப்பது. மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவரின் அருளுணர்வுகள் நமக்குள் குருவாகி, இந்த மனித வாழ்க்கையில் இருளைப் போக்கி, மெய்யுணர்வை அறியும் நிலையாக நாம் செயல்படுவோம்.

இந்தச் சரீரத்திலேயே ஒளியின் சரீரமாக ஆகி, என்றும் “பெருவீடு, பெருநிலை’ என்ற நிலையை அடைய முடியும். இதை வேகாக்கலை என்கிறோம். ஆகவே, அத்தகைய நிலையை நீங்கள் அனைவரும் அடைய, எமது அருளாசிகள்.
 
(பக்கம் 42-46)
“பரமபதம்” என்ற ஒரு விளையாட்டை நமது ஞானிகள் உருவாக்கி, அதில் மனிதர் பெற வேண்டிய, உயர்ந்த நிலை எது? மனிதர்களின் எண்ணத்தால் அவர்களுக்கு உண்டாகின்ற உயர்வுகளும், தாழ்வுகளும் தரும் பலன் என்ன? போன்றவைகளை அதில் உணர்த்தியுள்ளார்கள்.

இவ்வாறு, நாம் விளையாடும் விளையாட்டுக்களில் கூட, நாம் மெய்ஞானத்தைப் பெறும் வண்ணம், அன்று மகாஞானிகள் உண்மையின் தத்துவத்தை, நாம் அறிந்து செயல்படும் விதமாக எளிமைப் படுத்தியிருந்தனர்.

தாயக்கட்டையை உருட்டி, விழுகின்ற எண்ணுக்கேற்பக் காயை நகர்த்தும் பொழுது, அங்கே, ஏணியின் படம் இருந்தால் மேலே ஏறவும், பாம்புத் தலையின் படம் இருந்தால், காயைக் கீழே நகர்த்தவும் நாம் செய்கின்றோம். அதில் யானை, பூனை, நாய், பன்றி எனப் பலவிதமான படங்கள் போடப்பட்டிற்கும்.

நாம்  உயர்ந்த எண்ணங்களை எண்ணுகிற பொழுது, ஏணியில் ஏறுவது போன்று உயர்ந்த நிலைகளை, நம் மனித வாழ்விலும், உயிரிலும் பெறுகின்றோம்.

மாறாக, மனித வாழ்க்கையில் இன்னல்களினால் சோர்வுற்று, நமது உணர்வில் நஞ்சைக் கலக்கின்ற பொழுது, பாம்பு கடித்துக் காய் கீழே போவது போன்று, நம் உயிராத்மா கீழான பிறவிகளுக்குச் செல்கின்றது என்பதே, அவ்விளையாட்டின் மூலம் நமக்கு உணர்த்தப்பட்டது.

பரமபத விளையாட்டில் மேலும், மேலும் வெற்றி பெற்று, முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் போது, வழியில் பெரிய பாம்பின் படம் போடப்பட்டிருக்கும். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்த பிறகு, அந்தப் பெரிய பாம்பிடம் தப்பித்தால்தான் உண்டு. இல்லையென்றால், ஆரம்பித்த இடத்திற்கே, கொண்டு போய்ச் சேர்ப்பித்துவிடும்.

இவ்வாறு விளையாட்டு அமைக்கப்பட்டதற்கு காரணம், நமது உணர்வின் எண்ணத்தால் நாம் உயர்ந்து வந்து கொண்டிருக்கும் பொழுது, சிறிது ஆணவத்துடன் நாம் செயல்பட ஆரம்பித்தோம் என்றால், அந்த ஆணவம், நம்மை எங்கு கொண்டு போய்ச் சேர்க்கும்? என்பதை உணர்த்துவதற்கே, பரமபத விளையாட்டில், பெரிய பாம்பின் படம் போடப்பட்டது.

உதாரணமாக, எம்மைக் காட்டுக்கு அழைத்துச் சென்ற குருதேவர், எமது சுட்டுவிரலைக் காண்பித்தால் போதும் பெரிய மரத்தையே சாய்க்கும் வல்லமை எமக்கு கொடுத்திருக்கின்றார்,

அந்த ஆணவம் கொண்டு, பிறிதொரு மனிதரை வீழ்த்துவோம் என்ற எண்ணம் கொண்டு, யாம் செயல்பட ஆரம்பித்தோமானால், அந்த ஆணவம் எம்மைக் கீழ்நிலைக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விடும்.

ஆகவே, மனிதர் தாம் எவ்வளவு உயர்ந்த நிலையைப் பெற்றிருந்தாலும், அவருடைய உணர்வில்  சிறிதும் நஞ்சு கலக்காது செயல்பட்டு வர வேண்டும் என்பதை உணர்த்துவதற்கே, பெரிய பாம்பின் படம் அந்தப் பரமபத விளையாட்டில், ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அது போன்றே, விளையாட்டில் பெரிய பாம்பிடம் நாம் கடிப்பட்டால், கீழே உள்ள பன்றியிடம் நம்மை கொண்டு போய்ச் சேர்ப்பிப்பதாக, அவ்விளையாட்டில் அமைக்கப்பட்டிருக்கும்.

அதற்குக் காரணம், பன்றியானது கெட்டதைப் பிளந்து, நல்ல உணர்வைத் தனக்குள் நுகர்ந்து, மீண்டும் மனிதப் பிறவியை பெறும் தன்மை பெற்றது. அதனால்தான், இந்தப் பரமபத விளையாட்டில், நாம் நம் வாழ்வில் தீமைகளை நீக்கி, நல் உணர்வுகளைப் பெறவேண்டும் என்ற உண்மை, சொல்லப்பட்டது.

எனவே நம் வாழ்வில், அருள் ஞானிகளின் உணர்வுடன் தொடர்பு கொண்டு, வாழ்ந்து வந்தால், அது கெட்டதை விலக்கி, தம்மைக் காத்திடும் உணர்வாக விளைந்து, நாம் விண் செல்ல முடியும் என்பதை உணர்த்தவே, வைகுண்ட ஏகாதசியன்று பரமபதம் விளையாட்டு விளையாடுவதை, நமக்குப் பழக்கப்படுத்தி வைத்தனர் ஞானிகள்.

நாமோ, வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண் விழித்துத் தாயம் விளையாடினால், காலையில் ஆண்டவன் நம்மைச் சொர்க்கலோகத்திற்கு கொண்டு போவான், என்று நம்புகிறோம். ஆனால், எந்த ஆண்டவன் நம்மைச் சொர்க்கத்திற்கு கொண்டு போகிறான்? ஒவ்வொரு மாதமும், ஏதாவது ஒரு விழாவினை வைத்து, உயர்ந்த நற்குணங்களை நாம் பெறவேண்டும், என்று காண்பிக்கப்பட்டது.

காலையில், வாசலில் நீர் தெளித்துக் கோலம் இடுவதற்கும்,
அங்கே பூக்களை வைப்பதற்கும் காரணம்,
வாசலைச் சுத்தப்படுத்துவது போன்று, நமது மனதைச் சுத்தப்படுத்தி,
கோலங்களை எவ்வளவு அழகாகத் தீட்டுகின்றோமோ
அது போன்று, நம் மனதை நல் எண்ணங்களால் அழகுபடுத்தி,
பூவை வைப்பது போன்று
நம் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டும்
என்ற அடிப்படையில்தான், இவைகளெல்லாம் அன்று ஞானிகளால் வழக்கப்படுத்தி வைக்கப்பட்டது..

மனித வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக இருந்தாலும், அவற்றில் நன்மை பெறும் சக்தியாக, நமது எண்ணங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், பண்பையும், ஒழுக்கத்தையும் நமக்கு ஞானிகள் போதித்தனர்.

இவ்வாறு, அன்று ஞானிகள் நம் உயிராத்மா நிலைத்த ஒளிசரீரம் பெறச் செய்யும் மெய்ஞானத்தைப் போதித்து, அதனுடன் இணைந்த பண்பையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்து, அவற்றைச் சாஸ்திரங்களாக, வாழ்க்கை நெறிகளாக உருவாக்கி, நம் வாழ்க்கையில் கடைபிடிக்குமாறு பழக்கப்படுத்தி வைத்தனர்.

அன்று வாழ்ந்த மெய்ஞானிகள், மக்களுக்கு எது கிடைக்க வேண்டும் என்று விரும்பினாரோ, அதைப் பெறுவதற்கு நீங்கள் பாடுபட வேண்டும். அந்த மெய்ஞானிகளின் வழியில், எமக்கு, நமது குருதேவர் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அவர்கள் கொடுத்த அருள்ஞான உபதேசங்களையும், மெய்ஞான ஆற்றல்களையும், உங்களுக்கு யாம் வழங்கி வருகிறோம்.

எனவே, இவ்வாழ்வில் பெறுதற்கரிய மெய்ஞானத் தத்துவங்களை நீங்கள் அறிந்து, கடைப்பிடித்து, மகரிஷிகளின் அருளாற்றலை உங்களிடத்தில் சேர்த்து, சப்தரிஷி மண்டலத்தில் இணையும் ஆற்றலாக, உங்கள் ஆற்றல் வலுப் பெறவேண்டும் என, எமது ஆசிகளை உங்களுக்கு வழங்குகிறோம்.