ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 1, 2012

துன்பத்தை நீக்கி, மகிழ்ச்சியை விளைய வைக்கும் வழி

1. நமக்கு எப்படி துன்பம் வந்து சேர்கின்றது?
செம்பும் வெள்ளியும் கலந்து, ஒரு நகையைப் பற்ற வைக்கின்றோம். நெருப்பிலே காட்டும்போது, தங்கம் இளகுவதற்கு நேரமாகும். ஆனால்,
செம்பையும் வெள்ளியையும் கலந்து,
கொஞ்சம் பொடியாக வைத்தபின்,
அது சீக்கிரம் உருகிவிடுகின்றது. அதே சமயம்,
தங்கத்துடன் ஒட்டிக்கொள்கின்றது.

இதைப் போலத்தான், ஒருவர் துன்பமான நிலையைச் சொல்லுபோது, அது உடனடியாக நமக்குள் இயக்கச் சக்தியாகி, அந்த செம்பான நிலைகள் உருகுவது போல, நமக்குள் அவருடைய கஷ்டமான நிலைகள் சீக்கிரம் வந்து, நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றது.

தங்க நகை செய்யும்போது, ஒட்டவைத்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் நகை ஆகின்றது. இதைப்போல, ஒரு மனிதனுக்குத் துன்பம் ஏற்படும்போது, அதை மற்றவர்களிடம் சொல்லும் பொழுது, நாம் கேட்டுணர்ந்துதான் ஆக வேண்டியதிருக்கிறது.

அவருக்கு வாழ்க்கையின் நிலைகளில், நாம் நன்மை செய்தால்தான், மனிதனின் நிலையும் ஆகும். நன்மையினுடைய நிலைகளை நாம் செய்தாலும், இந்த வாழ்க்கையில்,
இன்று ஒருவருக்கு நாம் உதவி செய்தால்தான்,
நாளைக்கு நமக்கு ஒருவர் உதவி செய்வார்.
இன்று உதவி இல்லை என்று சொன்னால்,
அவர் நாளைக்கு, நமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்.

அவருடைய துன்பத்தை, நாம் கேட்டறியவில்லை என்றால், நம்முடைய துன்பத்தையும் அவர் கேட்டறியமாட்டார். கேட்டறிந்தாலும் எப்படி நகை செய்யும்போது, செம்பும், வெள்ளியும் வைத்து நாம் பற்றவைக்கின்றோமோ, அதைப்போல வாழ்க்கையில் இந்தக் குறைகள் நிச்சயம் வரத்தான் செய்யும்.

ஆனால், இந்த வாழ்க்கை என்ற நிலைகளில் நாம் ஓட்டினாலும், அடுத்த நகை செய்யும்போது, தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றி, அதைச் சுத்தப்படுத்திவிட்டு, அடுத்த நகையைச் செய்கின்றனர்.

அதைப் போல, ஒரு நண்பன் அவருடைய கஷ்டத்தைச் சொல்லும்போது, நாம் கேட்டறியும் போது, அதைக் கேட்டுணர்ந்து அவருக்கு உதவி செய்து விடுகின்றோம்.

தங்கத்துடன், செம்பும் வெள்ளியும் சேர்ந்து கொண்டபின், எல்லாமே ஒன்றாகிவிடுகிறது. அடிக்கடி இதே நகையை, அழித்து அழித்துச் செய்யும்போது, செம்பும் வெள்ளியும் அடிக்கடி சேர்ந்தால் என்னாகும்? அந்த செம்பின் தன்மை கூடி, அந்த தங்கத்தின் தன்மை குறைந்துவிடும்.

இதைப்போல, நாம் அடிக்கடி கவலையையும், சஞ்சலத்தையும் கேட்டுக் கொண்டேயிருந்தால், நமக்குள் நல்ல குணம் எல்லாம் குறைந்து, நமக்குள் அது நோயாக விளைந்து, நமக்குள் நல்ல குணமெல்லாம் கெட்டுவிடுகின்றது.

அப்படி கெடுவதோடு மட்டுமல்லாதபடி, நல்ல உடலும் கெட்டுவிடுகின்றது. நமது நல்ல சொல்லும், கெட்டுவிடுகின்றது. நமது சொல்லும்கூட, நமக்கு வெறுப்பாகத் தோன்றும்.

கஷ்டமாக இருப்பவர்கள் பிறரிடம் போய்ச் சொல்லும்போது, அந்த வேதனை கொண்டே சொல்வார்கள். எப்பொழுது பார்த்தாலும் நச்சு, நச்சென்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் சொல்ல வந்தாலே, நாம் ஓடுவோம். ஆனால், அந்த சங்கடமான உணர்வுகள் நோயாகவும் மாறிவிடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை கேட்டுணர்கிறோம். ஒவ்வொரு நிமிடத்திலும், பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம். அவருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம். அதைப் பார்க்கின்றோம்.

இன்று பத்திரிக்கை வாயிலாகப் பார்க்கப்படும் பொழுது, அடிக்கடி நம்மையறியாமலேயே, வேதனையும், துயரமும், பயமும், உங்களுக்குள் வந்து, சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இதை எப்படிப் போக்கிக் கொள்வது? ஏதாவது வழி இருக்கிறதா?
2. துன்பத்தை நீக்க ஞானகுரு கொடுக்கும் கடுமையான ஆயுதம் ஆத்ம சுத்தி
நாம் கையிலே ஆயுதத்தை வைத்துக்கொண்டு, ‘’புலி வருது, புலி வருது’’ என்று சொன்னால்,
துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்?
‘’துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம்’’,
சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம்.’’
‘’ஐய்யய்யோ!  புலி வருது, புலி வருது!’’  என்று, துப்பாக்கியை வைத்துக் கொண்டு, சுடாமல் இருந்தால் என்ன பண்ணும்? அது நம்மைத் தாக்கிவிடும்.

இதைப் போலத்தான், ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். சந்தர்ப்பத்தில் நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும், ‘’நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்’’.

ஆக உதவி செய்தாலும், அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள், உங்களுக்குள் ஆட்டிப்படைக்காதபடி ‘’ஆத்மசுத்தி’’ என்ற இந்த ஆயுதத்தை எடுத்து ‘’ஈஸ்வரா’’ என்று புருவ மத்தியில் உள்ள உங்கள் உயிரை வேண்டி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா’’ என்று ஏங்கி தியானிக்க வேண்டும்.

‘’அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், ங்கள் இரத்த நாளங்களில் கலந்து, உடல் முழுவதும் படர்ந்து, இரத்தங்களில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்’’ என்ற ஏக்க உணர்வுடன், கண் திறந்து ஒரு நிமிடமும், கண்ணை மூடி ஒரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி எடுத்துக் கொண்டபின், கண்ணைத் திறந்து, துன்பப்பட்டவர்களிடம், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால், உங்கள் துன்பங்கள் நீங்கும், நீங்கள் நலம் பெறுவீர்கள்’’ என்று சொல்லிவிட்டு, அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள். அவர்களது கஷ்டம், உங்களுக்குள் வராமல் தடுக்க முடிகின்றது,

நாம் நகை வாங்கிபின், அடுத்த நகை செய்யும்போது, அதில் உள்ள வெள்ளியையும், செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ, அதே போல அடுத்த நிமிடமே, கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு, நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்’’ என்பது.
     
நமக்குள் தீயது சேராது தடுக்கும், இந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு, நமக்குள் தியானமிருக்க வேண்டும்.
‘’தியானம்’’ என்பது எது?  
நமக்குள் கெட்டதைச் சேரவிடாது,
வைராக்கியமான நிலைகள் பெறவேண்டும்.
இதுதான் தியானம் என்பது.
     
பக்தியில் என்ன செய்கின்றோம்? நல்லதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள், ஆனால், தியானம் என்பது, நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வது.
     
பக்தி என்பது நல்லதை நினைப்பது.
தியானம் என்பது, உயர்ந்த ஞானிகளின் சக்திகொண்டு, நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது.  இந்த சக்தி இல்லையென்றால், செயல்படுத்தமுடியாது.

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும், அந்த ஞானிகளின் அருள் சக்தியை, இந்த ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகளில் வலு கொண்டு உங்களுக்குள் பெறச் செய்து, வாக்கின் நிலையாக,  ஆத்ம சுத்தியை கடும் ஆயுதமாக, யாம் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.


 3. குரு வழியில் மகிழ்ச்சியை விளைய வைக்கும் முறை  
அதற்குத்தான், அந்த ஞானிகள் சொன்ன அந்த உண்மையின் சக்தியை, உங்களுக்குள் இந்நேரம் வரையிலும் யாம் உபதேசித்ததுஇந்தக் கூட்டுத் தியானத்தில், எல்லோருடைய அருள் வாக்கும், யாம் மட்டுமல்ல, உங்கள் அனைவருடைய அருள் வாக்கும் சேர்க்கப்படும் பொழுதுதான், அந்த வலு கூடுகின்றது, என்று நமது குருநாதர் சொன்னார்.

உன்னிடம் எவ்வளவு பெரிய சக்தி கொடுத்தாலும், ஒரு விதையைக் கொண்டு போய்ப்போட்டு, அந்த விதை பல விதைகளாக விளைந்தால் தான், சாப்பாட்டிற்கு உதவும். இல்லையென்றால், ஒரு விதை ஒன்றுக்குமே உதவாதுடா என்று, நமது குருநாதர் எம்மிடம் சொன்னார்.

ஒரு நெல்லை வைத்துக் கொண்டு, பசியைப் போக்கிவிடுவேன் என்று சொன்னால் முடியுமோ? முடியாது. ஒரு நெல்லை வைத்துச் சாப்பிட முடியாது. அந்த நெல்லை விளைய வைத்து, அது பல நெல்லாக ஆன பின் தான், சாப்பிட முடியும்.

அதே மாதிரிதான், உங்ககளிடம் உள்ள துன்பத்தையெல்லாம் போக்க வைக்கிறோம். 
நன்றாக இருக்கின்றேன்.
நன்றாக இருக்கின்றேன்,
நன்றாக இருக்கின்றேன்.
என்று நீங்கள் சொல்ல வேண்டும். அவ்வாறான சொல் வரவேண்டும்.

உங்கள் பேச்சையும், மூச்சையும் பார்த்து,  மகிழ்ச்சி அடைகின்றவர்களுக்கெல்லாம் நல்லது விளைய வேண்டும்.  அப்படித்தான், நல்லதை விளைய வைக்க முடியும். இதைத்தான் எமது குருநாதர் சொன்னார்.

ஆக, அவர்கள் நன்றாக இருக்க வேண்டும். என்ற எண்ணத்தை உனக்குள் வளர்த்து, நல்ல வித்தினை அவர்களுக்குள் பதியச் செய்து, அந்த வித்தினை நீ எப்படி வளர்க்க வேண்டும் என்று சொன்னார். அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.