ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 2, 2013

சாப அலைகளிலிருந்து விடுபட, கணவன் மனைவி தியானம் அவசியம்

1. சாப அலைகள் எப்படிப் பாதிக்கின்றது?
இன்றைக்கு இராமநாதபுரம் ராஜாவினுடைய தன்மைகள் எடுத்துக் கொண்டால், அங்கே பல ஞானிகளுக்கு இடவசதியும், மற்ற நிலைகளும் செய்து கொடுத்திருந்தார்கள். ஆனால், ஒரு ஞானியை அவமதித்ததினாலே அவன் இட்ட சாபத்திலே 40 வயது ஆகிவிட்டால், அந்த அரசனுக்கு ஆண் வாரிசே இருக்காது.

அந்தச் சாபமிட்ட நிலைகள் கொண்டு இன்றும் அதுதான். ஆக, அங்கே யார் வந்து அரச சபையை ஏற்றுக்கொள்கின்றார்களோ, அந்த சாப நிலைகள் கொண்டு, சரியாக 40 வயது வந்தால் அவருக்குப் பல தொல்லைகள் வரும்.
2. ஒரு பிச்சைக்காரனின் சாப அலை எப்படிப்பட்டது?
உதாரணமாக, ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான். கடும் வேதனையும், சங்கடமும், துன்பமும், விரக்தியின் நிலைகள் கொண்டு அவன் திரிந்து கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராது நம்மிடத்தில் யாசகத்திற்கு வருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனைக் கடுமையான சொற்கள் கொண்டு திட்டப்படும் பொழுது, அவன் கடுமையான வாக்கு கொண்டு நம்மைச் சொல்லிவிட்டால்,
அந்த வாக்கு உடனடியாகப் பலிக்கும்.
ஏனென்றால், அந்த நஞ்சின் தன்மை.

ஆகவே, ஒரு தீயவனுடைய சக்தியோ அவன் சாபமிட்டான் என்றால், அந்த உணர்வுகள் பாலுக்குள் விஷம் பட்டால், அந்த விஷமுள்ள பாலைக் குடித்தால் எப்படி நஞ்சாகி நம்மை மாற்றிவிடுகின்றதோ, அதைப் போல ஒரு சாதாரண மனிதனாக இருந்தாலும், அவன் சாபமிடும் நிலைகள் கொண்டு சாபமிட்டால், என்ன சொன்னாய்? என்று எதிர்த்துக் கேட்போம்.

அவன் மீண்டும் எதாவது சொன்னால் நாம் அடிக்கத் துணிவோம்.
அந்த ஆத்திரத்தை நாம் ஊட்டப்படும் பொழுது,
அவன் மீண்டும் கடுமையான சொற்களைச் சொன்னால்,
அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்துவிடும்.

அவ்வாறு சேர்ந்துவிட்டால், அந்தச் சாப அலைகள் அந்தக் குடும்பப் பரம்பரையில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும், ஆட்டிப்படைத்துவிடும். ஆனால், அவர்களுக்குச் செல்வம் இருக்கும், உடலுக்குள் துன்பமிருக்கும், மகிழ்ச்சி இருக்காது.

சாபமிடுபவன், ஏழ்மை என்ற நிலையில் எப்படியெல்லாம் துன்பம் அனுபவித்தானோ, அவன், உள்ளுக்குள் வேதனை கொண்டு அனுபவித்தாலும், பொருள் இல்லாததனால் அவனுக்குத் தாங்கும் சக்தி இருக்கின்றது.

ஏனென்றால்,அவன் உடலில் விஷத்தின் தன்மை வரப்படப்போகும் பொழுது, அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடிகின்றது.

ஆனால், செல்வச் செழிப்புடன் ஆனந்தமாக வாழ்பவர்களுக்கு, இத்தகைய சாபத்தால் வேதனையாகிவிட்டால், அவருக்குள் தாங்கக்கூடிய சக்தி இல்லை. வேதனைகள் அதிகமாக இருக்கும். பொருள் இருக்கும், உள்ளுக்குள் அதைச் சுவைக்கும் தன்மை மகிழும் தன்மை இல்லை.

உடல் முழுவதற்கும் நரகத்தை அனுபவிப்பது போன்று, ஒவ்வொரு நிமிடமும் வேதனையை அனுபவிப்பார்கள். ஆக, இந்த வேதனையான உணர்வுகளை உடலிலே விளைய வைத்தால், உடலை விட்டுச் சென்றபின் அவரின் நிலை என்ன?

மிருகங்கள் அனைத்துமே விஷத்தின் தன்மை கொண்டு உடலாகப் பெருக்கிக் கொண்டது. இறந்தபின், உடலில் விளைந்த வேதனையான உணர்வின் அணு செல்கள் அனைத்துமே உயிராத்மாவில் சேர்ந்து, மிருகமாகத்தான் பிறக்க நேரும்.

ஏனென்றால், இந்த ஏழ்மையின் நிலைகள் சாபமிட்டு, அத்தகைய விஷத்தை இவன் வளர்த்து இவன் சென்றபின்,
மிருகத்தின் அலைகளின் உணர்வுகள் சேர்க்கப்பட்ட
அணு செல்களின் வாசனை வரும் பொழுது,
அவன் எந்த அநாகரிக நிலையில் சாபமிட்டானோ,
அதற்கொப்ப அவனை உருமாற்றிவிடும்.
3. ஞானியின் வாக்கும் தரித்திரத்தில் வாழ்பவன் சாபமிடும் நிலையும் 
இப்பொழுது, யாம் பல வருடங்கள் சிரமப்பட்டு, பல ஆற்றல்கள் பெற்று, நீங்கள் நலம் பெறவேண்டும் என்று ஒரு வாக்கைக் கொடுத்தால், அந்த வாக்கை நீங்கள் ஏற்றுக் கொண்ட நிலைகளுக்கு ஒப்பத்தான், அது சீக்கிரம் நல்லதாகின்றது. ஆனால், அது கால தாமதமாகும்.

வாக்குக் கொடுக்கக்கூடிய நிலைகள், யாம் நல்லதைச் செய்து அதைக் கொடுத்தாலும் உடனடியாக சிலவற்றைச் செய்யலாம். ஆனால், அது நீடித்த நாட்களுக்குச் செயல்பட வேண்டுமென்றால், உங்கள் எண்ணத்தைக் கொண்டுதான் அதை ஊடுருவச் செய்து, நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

ஒரு ஞானி சொல்லக்கூடிய வாக்கைக் காட்டிலும், ஏழ்மையிலே தரித்திரத்திலே வாழ்பவனின், விஷத்தன்மையான உணர்வுகள் அவ்வளவு சீக்கிரம் வேலை செய்யும்.
4. சாப அலைகளிலிருந்து விடுபட, கணவன் மனைவி தியானம் அவசியம்
எனவே, இதைப் போன்றவைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால், யாம் சொன்ன முறைப்படி, தியானத்தை சரியான நிலைகளில் கணவன் மனைவி இருவரும் கடைப்பிடிக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள், கண்டிப்பாக கூட்டுக் குடும்ப தியானம் இருக்க வேண்டும்.

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து, ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து தரமாவது ஒருவருக்கொருவர் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணிப் பழகவேண்டும்.

சாப்பிடும் பொழுது ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது, ஆத்ம சுத்தி செய்யவேண்டும். படுக்கைக்குச் செல்லும் பொழுது, ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். எமது அருளாசிகள்.