ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 28, 2016

மற்றவர்களைத் தான் நம்பத் தயாராக இருக்கின்றோம் - நம்மை நம்புகின்றோமா...?

வீட்டில் சந்தோஷமாக இருப்பார்கள், ஒரு சிறு குறை வந்துவிட்டால் போதும். கணவன் மனைவிக்குள் சண்டை வந்து ஒரே ரகளை தான்.

“இப்படிச் சொன்னார்களே..,” என்று விஷம் கலந்து வளர்ந்து கொண்டே போகும். இதை நிறுத்தும் நிலை இல்லை. இன்று எத்தனையோ குடும்பங்களில் இது நடக்கின்றது.

ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்திற்குள் எல்லோரும் நல்லது செய்தாலும் ஒரு பிழை வந்தால் அது விஷமாக மாறி நமக்குள் நல்ல குணங்களையே மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகக் கோவில்களில் சிலையை வைத்து நம் நல்ல குணங்களைக் காத்திடும் நிலைகளை அழகாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஞானிகள் சொன்னபடி அந்த நல்ல சக்திகளை நான் யாராவது எண்ணுகின்றோமா..? எண்ணி எடுத்து அதை நமக்குள் சேர்க்கின்றோமா? கோவிலுக்குள் சென்றவுடன் ஞானிகள் சொன்னதையெல்லாம் மறந்துவிடுகின்றோம்.

கண்களால் அந்தச் சிலையை உற்றுப் பார்த்து நம் உணர்வுகளையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து அந்த அருள் உணர்வுகளை நுகர்தல் வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி அந்தச் சக்திகளைப் பெறுதல் வேண்டும்.

அடுத்து எங்கள் குடும்பம் முழுவதும் அந்த அருள் சக்தி படரவேண்டும். கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ வேண்டும். என் மாமன் மாமியாருக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

கோவிலுக்குள் வரும் அத்தனை பேருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பயிர் செய்கின்றோம். பருவத்தில் மழை இல்லாமல் விளைச்சல் இல்லாமல் கருகிவிட்டது என்றால் கோவிலில் போய் என்ன நினைக்கின்றோம்?

“இத்தனையும் கஷ்டப்பட்டுச் செய்தேன்.., எல்லாம் பாழாகிப் போய்விட்டது.., பயிர்கள் எல்லாம் கருகிப்போனது..,” என்று இப்படித்தான் எண்ணுகின்றோம்.

ஆனால், அந்தக் கருகிய உணர்வை நாம் எடுத்தோம் என்றால் என்ன ஆகும் என்று நாம் அறியவில்லை.

ஏனென்றால் அதே உணர்வுடன் விவசாயத்திற்குச் செல்லும்போது கண்ணிலிருந்து அந்த (கருகிய) உணர்வுகள் பயிர்களில் தாக்கப்படுகின்றது. நீங்கள் சங்கடத்துடன் ஒரு செடிக்குத் தண்ணீரை ஊற்றிப் பாருங்கள். பயிர் வளராது வாடிவிடும்.

சில குடும்பங்களில் சலிப்பு சஞ்சலம் என்று இருக்கும். அதை மாற்றும் நிலையைக் கோவிலில் வைத்து எடுக்கும்படிக் காட்டியுள்ளார்கள். அதை விட்டு விட்டு என்ன செய்கின்றார்கள்?

சஞ்சல உணர்வுடன் “அவன் இப்படிச் செய்தான், இது இப்படி ஆகிவிட்டது” என்று இதே உணர்வுடன் வயல்களுக்குச் செல்லப்படும் பொழுது அந்த உணர்வுகள் அங்கே படர்கின்றது.

நீங்கள் சங்கடத்துடன் எந்தப் பயிரை நட்டாலும் அது சரியாக விளையாது.

அதிலிருந்த சத்தை எடுத்துத்தான் நமக்குள் உணர்வாக மாறுகின்றது. ஏனென்றால், தாவர இனச்சத்தை உணவாக உட்கொண்ட நிலைகள் தான் உணர்வாகவும் எண்ணமாகவும் நமக்குள் வருகின்றது).

எதன் உணர்வு நம்முடன் சத்தாகின்றதோ நாம் சொல்லாகச் சொல்லும்போது அதில் (செடியில்) போய் இணையத்தான் செய்யும்.

அப்பொழுது நமக்குள் அதை எடுத்து விஷத்தைக் கலந்த உணர்வைப் பாய்ச்சப்படும் பொழுது செடிகள் கருகத்தான் செய்யும். இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிலேயும் இதே மாதிரித்தான் உணர்வுகள் இயக்கமாகின்றது.

பொருளை வாங்கிச் செல்பவர்கள் நலமும் வளமும் பெறவேண்டும். அவர்களுக்கு நல்ல வருமாணம் வரவேண்டும். பாக்கியைச் சரியான முறையில் நமக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமா என்றால் இல்லை.

தொழிலில் சிக்கல் வந்தால் இன்று என்ன செய்கிறோம்?

ஜோசியம் பார்ப்பவரைத் தேடுவோம், ஜாதகக்காரரைப் பார்ப்போம், மந்திரக்காரரைப் போய்ப் பார்ப்போம் சாமியாரைத் தேடிச் செல்வோம். இன்னும் யாரையெல்லாம் பார்க்க வேண்டுமோ அதையெல்லாம் செய்வோம்.

ஆனால், “நீங்கள் ஒரு மந்திரக்காரர்” என்று நீங்கள் நினைப்பதே இல்லை. எதை எண்ணி உள்ளுக்குள் சுவாசிக்கின்றீர்களோ அந்த உணர்வைத்தான் உயிர் இயக்குகின்றது.

“உங்களால் இயக்க முடியாதா..,?”

தீமைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறவேண்டும். சிந்தித்துச் செயல்படும் திறன் பெறவேண்டும், அறிந்துணர்ந்து செயல்படும் அருள் ஞானம் பெறவேண்டும் என்று எண்ணி எடுப்பதற்காக வேண்டித்தான் கோவிலை உருவாக்கிக் காட்டியுள்ளார்கள்.

ஆக, நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நம் உயிர் உருவாக்கும். கோவிலுக்குச் சென்று இதை எண்ணி எடுக்க முடியுமா முடியாதா..,?

“ஏன்..,? மற்றவர்களை நம்புகின்றீர்கள்.., உங்களை ஏன் நம்ப முடியவில்லை..,?” நம்பலாம் அல்லவா.

உங்களை நம்புவதற்கு மன பலம் வேண்டும். உங்களை நீங்கள் நம்புவதற்கும் அந்த மன பலத்தை நீங்கள் பெறுவதற்குத்தான் காலையில் துருவ தியானத்தை எண்ணி எடுக்கச் சொல்கிறோம்.

காலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் படரவேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது தினசரி தியானியுங்கள்.

உங்களுக்குள் பேராற்றல் பெருகும். மன வலிமை பெறுவீர்கள். எதை எப்படிச் செய்யவேண்டும் என்ற உபாயங்கள் உங்களுக்குள் தோன்றும். அருள் வழி வாழுங்கள். பேரானந்த நிலை அடையுங்கள்.